வரி பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு 'சீல்'
வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.;
வால்பாறை
வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரி வசூல் பணி
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை வசூல் செய்யும் பணியை ஊழியர்கள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதி முழுவதும் ஒலி பெருக்கி மூலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லம் தேடி வரி வசூல் பணியும் நடைபெற்று வருகிறது.
கடைகளுக்கு 'சீல்'
இந்த நிலையில் வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள 12 கடைக்காரர்களுக்கு பலமுறை எச்சரிக்கை செய்தும், நோட்டீஸ் வழங்கியும் வரி பாக்கி செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதனால் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் நேற்று காலையில் வரி பாக்கி செலுத்தாத 12 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
இதுகுறித்து ஆணையாளர் பாலு கூறுகையில், பலமுறை எச்சரிக்கை விடுத்தும், போதிய கால அவகாசம் வழங்கியும் பலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை செலுத்தாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலை தொடரும் பட்சத்தில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகி உள்ளோம். எனவே வால்பாறை பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரிபாக்கிகளை செலுத்தி நகராட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றார்.