தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

Update: 2024-05-14 04:45 GMT

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற பிளஸ்-1மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ,மாணவிகள் பதிவு செய்தனர். இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள், 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள் ஆவர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுத பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

இந்நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், 91.17 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுதிய நிலையில் இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.26 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவிகள் 94.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 7.43 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் அசத்தியுள்ளனர். மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம்:

இயற்பியல் - 97.23%

வேதியியல் -96.20%

உயிரியல் -98.25%

கணிதம் -97.21%

தாவரவியல் -91.88%

விலங்கியல் -96.40%

கணினி அறிவியல் - 99.39%

வணிகவியல் - 92.45%

கணக்குப் பதிவியல் - 95.22% 

Tags:    

மேலும் செய்திகள்