நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ்-1 தேர்வில் 91.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் நாமக்கல் மாவட்டம் 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பிளஸ்-1 தேர்வு முடிவுகள்
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்துக்கான தேர்வு முடிவுகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.
இந்த தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் அந்தந்த பள்ளிகளில் உள்ள விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
91.46 சதவீதம் பேர் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9,527 மாணவர்கள், 9,572 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 ஆயிரத்து 100 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை எழுதினர். இவர்களில் 17 ஆயிரத்து 469 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 91.46 ஆகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.08 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.82 ஆகும். மாணவர்களை விட 8.74 சதவீதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 97.33 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.87 சதவீதம் குறைந்து உள்ளது.
14-வது இடத்திற்கு தள்ளப்பட்டது
குறிப்பாக அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 292 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 852 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.01 ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு 95.43 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதன்படி தற்போது 9.42 சதவீதம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் சரிவடைந்துள்ளது.
மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு 7-ம் இடத்தில் இருந்தது. தற்போது 7 இடங்கள் பின்தங்கி 14-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு 24 அரசு பள்ளிகள் உள்பட 85 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து இருந்தன. தற்போது வெளியாகி உள்ள முடிவுகளின்படி 4 அரசு பள்ளிகள் உள்பட 74 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.