ஆவடி மாநகராட்சியில் ரூ.114 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

ஆவடி மாநகராட்சியில் ரூ.114 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.;

Update:2022-08-09 07:54 IST

ஆவடி,

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பனந்தோப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.113.84 கோடியில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ளது.

இந்த குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்ததுடன், அதன்மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும், ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ரூ.2.33 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 32 இலகுரக வாகனங்களையும், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக ரூ.13.50 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அடைப்புகள் நீக்கம் செய்யும் ஒரு வாகனத்தையும் தொடங்கி வைத்ததுடன், மகளிர் சுய உதவி குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசியகொடி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ‌.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னை அடையாறில் ரூ.7.35 கோடியில் 4 புதிய கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கும் பணியையும் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்