வேன் கவிழ்ந்த விபத்தில் 11 ஆசிரியர்கள் காயம்

மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது வேன் கவிழ்ந்த விபத்தில் 11 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-26 18:45 GMT

விபத்து

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, நெகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில், 13 பேர் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் கேரளா மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா செல்ல ஒரு வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். வேனை செஞ்சி காந்தள் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 38) என்பவர் ஓட்டியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

11 ஆசிரியர்கள் காயம்

இதில் வேனின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய கவுல்பாட்சா (38), சரவணன் (36), சுமன் (41), வேலு (35), நந்தகோபால கிருஷ்ணன் (45), சந்திரலேகா (42), அமுதா (43), ரேணுகாம்பாள் (33), இந்திரா (55), மதுமதி (24), கருணாநிதி (60) ஆகிய 11 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர். குமரேசன் (35), நெடுஞ்செழியன் (60) ஆகிய 2 ஆசிரியர்களுக்கும், டிரைவர் சீனிவாசனுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்களும், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்