கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

மணலியில் கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-04-13 13:02 IST

சென்னை, மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். வெல்டர். இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 15). இவர் மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது 10-ம் வகுப்புக்கு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று மாணவியின் பெற்றோர் திருவொற்றியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று விட்டனர்.

அப்போது மாணவியிடம் நாளைக்கு (அதாவது இன்று) நடக்க இருக்கும் கணித தேர்வுக்கு நன்றாக படிக்கும் படி கூறிவிட்டு சென்றனர். ஏற்கனவே கணக்கு பாடம் வராததால் அச்சத்தில் இருந்த மாணவி ராஜ ஸ்ரீ, பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவுடன் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீ பற்றியதும் வலியால் அலறி துடித்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாணவி ராஜ ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தேர்வுக்கு பயந்து தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்