இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்

நாட்டு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2024-03-06 00:55 IST

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்திச் செல்வதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து ரோந்து கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் விரைந்தனர்.

அப்போது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த நாட்டு படகை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். இதில் அந்த படகில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருட்கள் மற்றும் படகை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், படகில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு அவர்கள் 3 பேரையும் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கைதானவர்களில் ஒருவர் பாம்பன் அக்காள்மடத்தைச் சேர்ந்த ரெபின்ஸ்டன் (வயது 32), என்பதும் மற்ற 2 பேரும் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர்களா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த போதைப்பொருள் பறிமுதல் குறித்து சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்டுப்படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 5 சாக்குப்பைகளில் 111 பாக்கெட்டுகளில் இருந்த 99 கிலோ 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.108 கோடி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த போதைப்பொருளை பாம்பனில் இருந்து காரில் ஏற்றிக் கொண்டு வந்த ஒருவர், கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உளவு பிரிவு போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்