சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூா் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு - 104 பேர் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக கண்டுபிடித்து விட்டதால் 104 பேர் உயிர் தப்பினர்.

Update: 2022-06-04 08:28 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 98 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் என 104 பேர் செல்ல இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர். விமானத்தின் கதவுகளும் மூடப்பட்டன. அதன் பின்பு விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது.

அப்போது விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திய அவர், இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானம் இழுவை வாகனம் மூலமாக இழுத்து வரப்பட்டு மீண்டும் நடைமேடையில் நிறுத்தப்பட்டது.

விமான என்ஜினீயர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்துக்குள் ஏறி எந்திரக்கோளாறை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த விமானம் நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

ஆனால் 2 மணி ஆகியும் விமானம் பழுது பார்க்கும் பணி முடிவடையவில்லை. இதனால் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். ஆனால் 4 மணிக்கும் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ஓய்வு அறைகளுக்குள் விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதன் பிறகு பயணிகள் அனைவருக்கும் டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகா் பயணிகள் பலா் தாங்கள் வீடுகளுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டனர். சில பயணிகள் விமான நிலையத்திலேயே பரிதவித்தனர்.

சிங்கப்பூர் செல்ல வேண்டிய 98 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரமாக அவதிக்குள்ளானார்கள். அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு விமானியால், தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் 104 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் 13½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணியளவில் அந்த விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்