தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியின்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-05 04:50 GMT

சென்னை,

தமிழ்நாட்ல் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.

காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்