ஊஞ்சலூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
ஊஞ்சலூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி;
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி ஊராட்சியில் ஏராளமானோர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் கொளாநல்லி பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுபத்ரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பணியாளர்கள் கூறும்போது, 'கடந்த ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்கள் பணியாளர்கள் யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை. தீபாவளி நெருங்கி வருவதால் செலவுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். எனவே ஊதியம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட வந்தோம்' என்றனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, 'இன்னும் ஒரு வார காலத்தில் அனைவருக்கும் ஊதியம் வழங்க ஆவன செய்யப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பணியாளர்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.