100 நாள் வேலைத்திட்டத்தை ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை -மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
100 நாள் வேலைத்திட்டத்தை ஜி.பி.எஸ்.மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல் தெரிவித்து உள்ளார்.;
100 நாள் வேலைத்திட்டத்தை ஜி.பி.எஸ்.மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல் தெரிவித்து உள்ளார்.
முறைகேடு
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பலர், தங்களுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றனர். ஆனால், இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை.
அதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இந்த திட்டத்தின்கீழ் தகுதியானவர்களாக கருதி, நிதி ஒதுக்கி உள்ளனர். ஒரே வீட்டை காண்பித்து 2 பேர் பெயருக்கு நிதி பரிமாறப்பட்டு உள்ளது. அதில் ஒரு பயனாளி 2020-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். ஆனால் அவர் அதன்பின்பு அரசு அலுவலகத்தில் விரல் ரேகை வைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதில் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
100 நாள் வேலை திட்ட பணி
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, 100 நாள் வேலைத் திட்ட பணியை ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்க முடியுமா? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியாகவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நாடு முழுவதும் கோடிக்கணக்கிலும், தமிழகத்தில் பல லட்சம் பேரும் 100 நாள் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வருகைப்பதிவேடு என்.எம்.எம்.எஸ் செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
திட்டப்பணிகள் தொடங்குவதும், முடிந்ததும் அந்த செயலியில் பதிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் 100 நாள் திட்டப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 100 நாள் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகிறது.
திட்டப்பணிகளுக்கான செலவை விட அதிக செலவீனம் ஆகும் என்பதால் 100 நாள் திட்டப்பணிகளை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 100 நாள் திட்டப்பணியில் முறைகேடுகளை தடுக்கவும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.