100 நாள் வேலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
சிந்தாமணி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது சில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிவிட்டு ஏற்கனவே வேலைக்கு பதிவு செய்திருந்த சில பணியாளர்களை வேலைக்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திடீரென ஜெயங்கொண்டம்-தா.பழூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 100 நாள் பணியாளர்களை சாலையை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்ற தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு சாலையோரத்திற்கு வந்தனர்.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) நாராயணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலக்கண்ணன், ராதிகா, பணி மேற்பார்வையாளர் நிர்மல்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து பணியாளர்களுக்கும் வேலை உள்ளதாகவும், அனைவரும் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தினார். இதனை ஏற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.