கோவை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி கடத்தல்
கோவையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி காணவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரணை நடத்தி வந்தார். அதில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை செல்வபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 27) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததது தெரியவந்தது.
இதையடுத்து கணேசனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை கடத்திய வழக்கில் கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு அளித்தார். அத்துடன் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் கணேசன் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க கூடும்.