சிறுமியை கர்ப்பிணியாக்கி ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு ஜெயில்; செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கர்ப்பிணியாக்கி ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.;
காஞ்சீபுரம் மாவட்டம் அய்யன்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 32). இவர், காஞ்சீபுரம், தென்னேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து கர்ப்பிணியாக்கினார். ஒரு குழந்தைக்கு தாயான பின் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, அகிலனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.