காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சங்கராபுரம் அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சங்கராபுரம் தாலுகா ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும், அவரது உறவினரான புதுப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகனான கூலித்தொழிலாளிராமு (24) என்பவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
அப்போது ராமு, அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். உடனே இதுபற்றி அவர், ராமுவிடம் சென்று, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.
கர்ப்பத்தை கலைத்தார்
அதற்கு கர்ப்பத்தை கலைத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றுகூறி மிரட்டி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். அதன் பிறகு ராமு, அப்பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12.7.2017 அன்று ராமு வீட்டிற்கு அப்பெண் நேரில் சென்று அங்கிருந்த அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு ராமு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் ராமுவின் தாய் விமலாதேவி, அக்காள் ரஞ்சினி, சித்தப்பா முருகேசன், சித்தி பூமா ஆகிய 4 பேரும் சேர்ந்து அப்பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர்.
10 ஆண்டு சிறை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு, விமலாதேவி, ரஞ்சினி, முருகேசன், பூமா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட ராமுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், மற்ற 4 பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராமு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.