தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நிலக்கோட்டை தாலுகா செங்கோட்டையை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இளங்கோவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு இந்திய தண்டனை சட்டம் 363-ன் கீழ் (கடத்தல்) 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.