12 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் உதவித்தொகை

கொரோனாவால் பெற்றோரை இழந்த 12 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் உதவித்தொகை- கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

Update: 2022-05-30 13:18 GMT

தூத்துக்குடி:

நாட்டில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பி.எம். கேர் திட்டத்தின் கீழ் தலா ரூ.10 லட்சம் உதவித்தொகை உள்ளிட்ட பி.எம். கேர் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இரு பெற்றோர்களையும் இழந்த 12 குழந்தைகளுக்கு பி.எம.் கேர் தொகுப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் 12 குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் போது ரூ.10 லட்சம் பெறும் வகையில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் அக்குழந்தைகளின் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டு, அதற்கான அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, சான்றிதழ் மற்றும் கடிதம் அடங்கிய தொகுப்புகளை கலெக்டர் செந்தில் ராஜ் வழங்கி பேசினார்.

அப்போது, பி.எம். கேர் திட்டத்தில் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதி வைக்கபபட்டு, அவர்கள் 23 வயது நிறைவடையும்போது மொத்த தொகையும் எடுத்துக் கொள்ளலாம். 18 வயதில் இருந்து 23 வயது வரை மாதாந்திர உதவித்தொகை குழந்தைகளுக்கு வழங்கப்படும். பாதுகாவலர் மற்றும் உறவினர்கள் இல்லாத நிலையில் குழந்தைகளை குழந்தை பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில்படி மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கான பள்ளிச்சீருடை, நோட்டு, புத்தகங்களுக்கான கட்டணம் பி.எம். கேர் திட்டத்தின்கீழ் செலுத்தப்படும். சமுகநீதி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரம் பெற்று வழங்ககப்படும். பாரத் பிரதான் மந்திரி ஜென் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் வருடத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக்காப்பீடு பெறும் வசதியும் உள்ளது, என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்