சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

நெல்லையில் இருந்து ஊட்டிக்கு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-06-04 16:12 GMT

அன்னூர்

அன்னூர் அருகே நெல்லையில் இருந்து ஊட்டிக்கு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டிக்கு சுற்றுலா

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் மதுரை மரிச்சியம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புனிதா (31). இவரும் மதுரையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் மற்றும் இவர்களின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து சுற்றுலா வேனில் ஊட்டிக்கு புறப்பட்டனர். வேனில் செல்வம், புனிதா உள்பட 15 பேர் பயணம் செய்தனர். வேனை டேனியல் ராஜரத்தினம் (21) என்பவர் ஓட்டினார்.

வேன் கவிழ்ந்து விபத்து

சுற்றுலா வேன் கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த காளியாபுரம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி ரனிஷா (14), ரஞ்சிதம் (75), தீனா மெர்வின் (15), செல்வகனி (39), எஸ்தர் ராணி (30), மணிஷா (10), வேதிகா (6), ரதீஷா (17), நேத்ரா (12) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதில் ரனிஷா, ரஞ்சிதம் ஆகியோர்   கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரைவர் டேனியல் ராஜரத்தினம் காயமின்றி தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்