வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினர் 10 பேர் கைது

கரூரில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாரிகளை தாக்கியதாக தி.மு.க.வை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-29 00:02 GMT

கரூர்,

கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.

இதனையடுத்து அங்கு நிலவிய அசாதாரண நிலையை உணர்ந்து அதிகாரிகள் சோதனையை கைவிட்டு திரும்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூருக்கு வந்தனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

10 பேர் கைது

கோவை சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் 2 பேர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 அதிகாரிகள் டிஸ்சார்ஜ்

கரூரில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாள் சோதனை நடத்த வந்தபோது, தாக்குதல் நடத்தியபோது, காயம் அடைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், பங்கஜ்குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிகாரிகள் 4 பேரும் நேற்று சிகிச்சை முடிந்து திரும்பினர்.

அதிக வழக்குகள் பதிவு செய்வோம்

இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 நாட்கள் சிகிச்சை முடிந்து திரும்புகிறார்கள். அதிகாரிகளுக்கு உள்காயம் மற்றும் ஒரு அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாரிகளை வேண்டுமென்றே தாக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்கு கொடுத்துள்ளோம். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் அதிகமாக வழக்குகளை பதிவு செய்ய போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்