ரூ.10 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிந்தாரிப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-12 14:06 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.03.2024) சென்னை, சிந்தாரிப்பேட்டை, மே தின பூங்காவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

சென்னை, சிந்தாதிரிபேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது. இவ்விளையாட்டு மைதானமானது, தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு சமூக ஒருங்கிணைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைப்பயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்