10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
கடலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் ஒருவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் 5 ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் 5 ஆசிரியர்கள், ஒரு மெட்ரிக் பள்ளி ஆசிரியர் என 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் மற்றும் கல்வி அலுவலர்களை கொண்ட குழுவினர், பள்ளியின் முன்னேற்றம், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பாடுபட்டவர்கள், பள்ளியின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உழைத்தவர்கள் போன்ற பல்வேறு நிலைகள் குறித்து ஆய்வு செய்தனர். நன்னடத்தை, குறிப்பாக அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து, 22 பேரை தேர்வு செய்து, சென்னை பள்ளிகல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
குற்ற வழக்கு
அதில், 11 பேரை பள்ளி கல்வித்துறையினர் தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியர் மீது குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்தது. கடைசி நேரத்தில் அவர் மீதான குற்ற வழக்கு கண்டறியப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.
இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் பெயரை நீக்கி, கடலூர் மாவட்டத்தில் 10 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நேற்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெறும் 10 ஆசிரியர்கள் பெயர் விவரம் வருமாறு:-
10 பேர்
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன், குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மஞ்சுளா, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதி, கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப், வாழைக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கருணாகரன், நடுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி, ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாசாமி, கடலூர் சி.கே. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ஆகிய 10 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.