'1½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் துன்பத்தை அனுபவிக்கும் மக்கள்'

‘1½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேதனையுடன் கூறினார்.

Update: 2022-07-25 17:10 GMT

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் கல்லறைதோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. பொதுமக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. விலைவாசி உயர்வு மட்டுமே மிச்சம். தற்போது மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கூறியதால் மின்கட்டணத்தை உயர்த்தியதாக மின்சாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் போதும் மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தும்படி கூறியது. ஆனால் மக்களின் நலன்கருதி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தி.மு.க. அரசு மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் பெயரில் தனித்தனியாக மின்இணைப்பு இருந்தால் அதை இணைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

இலவச மின்சாரம் ரத்து

அ.தி.மு.க. கொண்டுவந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி நடக்கிறது. எனவே மின்கட்டணம் கணக்கீடு செய்ய வருவோர் படிவத்தில் கையெழுத்து கேட்டால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு கொடுக்கும் திட்டத்தில், உரிய கட்டமைப்புகளை உருவாக்காததால் மின்தட்டுப்பாடு ஏற்படுகிறது. அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகள் ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி என்றாலே மின்வெட்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மீது பழியை போட்டுவிட்டு மின்கட்டணத்தையும் தி.மு.க. அரசு உயர்த்தி விட்டது. அரிசி, பருப்பு, பால், தயிர், கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.

பொய் வாக்குறுதிகள்

இதுபற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் எதையும் பேசவில்லை. அதன் விளைவு அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. ஏற்கனவே தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தியது.

இதேபோல் சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். தமிழகத்துக்கு விடியல் தரப்போவதாக கூறி விடிய, விடிய பேனர் வைத்தனர்.

ஆனால் 1½ ஆண்டில் மக்கள் எத்தனையோ துன்பத்தை அனுபவித்து விட்டனர். இன்னும் 3½ ஆண்டுகள் இருக்கிறது. எவ்வளவு துன்பத்தை மக்கள் அனுபவிக்க போகிறார்களோ? என்று தெரியவில்லை. குடும்ப தலைவிக்கு ரூ.1,000 தருவதாக முன்பு கூறினா். தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டு தானே ஆகிறது என்கின்றனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது.

அதையடுத்து பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. ஆனால் தேர்தலில் வாக்குறுதி அளித்த தி.மு.க. விலையை குறைக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்று தங்களுக்கு தெரியும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதுவரை ரத்து செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாது.

சட்டம்-ஒழுங்கு

இதுமட்டுமின்றி தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர் திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன. அதுபற்றி கேட்டால் மக்கள் யாரும் தாலிக்கு தங்கம் கேட்டு மனு கொடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். தி.மு.க. அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்காததால், எந்த பணியும் நடக்கவில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு போனதற்கு கள்ளக்குறிச்சி கலவரமும், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மீதான தாக்குதலும் உதாரணம். அ.தி.மு.க. அலுவலகத்தில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்கவில்லை.

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி

இதற்கிடையே கருணாநிதிக்கு கடலில் 134 அடி உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்கும் நிலையில் அது தேவையா? இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடப்பவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவருடைய வாழ்வில் சமாதானம் என்பதே கிடையாது. கட்சியை காட்டி கொடுத்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்