தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 68 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-05 15:01 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1½ லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். இதே போன்று கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளர் முத்துராணி மரக்கன்று நட்டினார். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 90 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

மரக்கன்று

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 68 ஆயிரத்து 90 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள ஊரகவளர்ச்சிதுறை 1 லட்சத்து ஆயிரத்து 865, வருவாய்த்துறை (அனைத்துஅலுவலங்கள்) 2 ஆயிரத்து 975, தூத்துக்குடிமாநகராட்சி 4 ஆயிரத்து 500, பேரூராட்சிகள் 5 ஆயிரத்து 400, நகராட்சிகள் 750, போலீஸ் துறை 3 ஆயிரம், சுகாதாரத்துறை 500, கனிமவளத்துறை (குவாரிகள்) 30 ஆயிரம், கூட்டுறவுத்துறை 1000, பள்ளிக்கல்வித்துறை 1 ஆயிரம், அனைத்துக் கல்லூரிகள் 4 ஆயிரம், பொதுப்பணித்துறை 2 ஆயிரம், மருத்துவக்கல்லூரி 100 ஆக மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 90 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. தொடர்ந்து டிசம்பர் 2022-க்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்