செங்கல்பட்டு விவசாயிகளுக்கு 1½ கோடியில் வேளாண் எந்திரங்கள்
செங்கல்பட்டு விவசாயிகளுக்கு 1½ கோடியில் வேளாண் எந்திரங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.;
நடப்பு ஆண்டில் வேளாண்மை-உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், 'தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நல உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறியவகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு 2 பவர் டில்லர் எந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில் 2,504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் 5000 பவர் டில்லர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட 166 விவசாயிகளுக்கு ரூ.1.40 கோடியில் 164 பவர் டில்லர்கள் மற்றும் 2 விசை களையெடுப்பான் கருவிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார். இதில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.