இராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;

Update:2023-08-18 18:59 IST

இராமநாதபுரம்,

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.8.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது. பெருநெல்லி, வாகை, மூங்கில், ஆலமரம், அரசமரம், அத்தி, விளாம்பழம், ஆவிமரம், கொடுக்கப்புளி, புங்கன், வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக முதல்-அமைச்சர் இன்று பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, இராமநாதபுரம் மாவட்ட பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நிறைவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்