950 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி ஓய்வூதிய ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 950 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பில் ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்;

Update:2023-05-27 00:15 IST

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதிய திட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களில் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக பயனளித்து வரும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர்களுக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் தற்போது 34,62,092 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தற்போது பல்வேறு மாவட்டங்களில் இத்தகைய முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திருப்போர் பட்டியலில் 64,098 பேர் மற்றும் புதியதாக 35,902 பேர் என மொத்தம் 1 லட்சம் பேருக்கு வருகிற ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,000 (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500) உதவித்தொகை பெறும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி மேலும் 1 லட்சம் பேர் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார்.

950 பயனாளிகளுக்கு ஆணை

அதன்படி விளிம்பு நிலையில் உள்ள 1 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் 6.5.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கி தமிழ்நாடு முதல்-அமைச்சர், இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த 1 லட்சம் பயனாளிகளுக்கும் ஜூன் மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களில் தலா 150 பேருக்கும், வானூர், திண்டிவனம் தாலுகாக்களில் தலா 100 பேருக்கும், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய தாலுகாக்களில் தலா 50 பேருக்கும் ஆக மொத்தம் 9 தாலுகாக்களுக்குட்பட்ட 950 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்