நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசம் 4-ம் நாள் திருவிழா - நெல்லுக்கு வேலியிடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி,
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புராணத்தின்படி, பட்டர்கள் காயவைத்த நெல்லை மழை வெள்ளத்தில் இருந்து நனையாமல் இறைவன் காத்ததாகவும், அதனை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.