அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

arrest

Update: 2022-11-15 21:29 GMT

ரூ.2¾ கோடி மோசடி

தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவரிடம் சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சசிகுமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகமாகினார். அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பி அரவிந்த்குமார் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.2 கோடியே 83 லட்சத்தை சசிகுமாரிடம் கொடுத்து உள்ளனர்.

ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் திரும்ப கேட்ட போது சசிகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிலர் அரவிந்த்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். மேலும் சசிகுமார் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தெரியவந்தது.

இதையடுத்து மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படி அரவிந்த்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமாரை ஏற்கனவே கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்