தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பால் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை நகர பா.ஜ.க. சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர தலைவர் உதயா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், தேசிய பொதுக்குழுஉறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்தாஸ், ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணாளன், சாந்தி, பொது செயலாளர் பாலமுருகன் சதீஸ், பொருளாளர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- கால்பந்தாட்ட மாணவியின் உயிரிழப்பு வருந்தத்தக்கது. ரூ.10 லட்சம் நிவாரணத்தால் அவரது இழப்பை ஈடுகட்ட முடியாது. பால் விலை ஏற்றத்திற்கு ஜி.எஸ்.டி. காரணம் என பொய் சொல்கிறார் அமைச்சர் நாசர்.
காரணமே இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தி.மு.க.வில் பொறுப்புடன் நடந்துகொள்ள கூடிய அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை. அரசின் வெள்ள நிவாரண நிதி என்பது யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் உள்ளது. தி.மு.க. அரசு மழை உள்பட எந்த விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படவில்லை. தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பும் வரை ஆளுநர் தமிழகத்தை விட்டு செல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.புதூர், அ.காளாப்பூர், இைளயான்குடி
எஸ்.புதூரில் ஆர்பாட் டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர்கள் நாகராஜன், கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொது செயலாளர் முருகேசன் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கண்ணையா முன்னிலை வகித்தார். இதில், நாகராஜ், ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் காளாப்பூர் தயாளன், ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாடு மாவட்ட செயலாளர் ரமேஷ், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மதன்ராஜா சக்தி, ஒன்றிய துணை தலைவர்கள் சிங்கம், முருகேசன், சாந்தி, மணிமாறன், மையநாதன், அருள்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையான்குடியில், மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.