வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

மானாமதுரையில் குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2022-11-15 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரையில் குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

மானாமதுரை சீனியப்பா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு அரசு ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் வசித்து வருகின்றனர். மிகவும் தாழ்வான பகுதியாக இப்பகுதி உள்ளதால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் அருகில் உள்ள ஆதனூர் கால்வாயில் இருந்து தண்ணீர் மற்றும் மழை தண்ணீர் குடியிருப்பு வீடுகளை சூழ்ந்து வெளியேற வழியில்லாமல் பல நாட்களாக தேங்கி நிற்கும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த குடியிருப்பு வீடுகளை சுற்றிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாமலும், வெளியில் இருந்து வீடுகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஒரு சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

மறியல் முயற்சி

இதுகுறித்து அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று மாமதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அங்கு மானாமதுரை போலீசார் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் வருவாய்த்துறையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த பகுதி மக்கள் தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தொடர்ந்து இங்கு இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்று நோய் பரவுகிறது. இதுதவிர வீட்டிற்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வருகிறது. இதனால் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். மேலும்கொசு தொல்லை அதிகமாக உள்ளது என கூறினர்.

நடவடிக்கை

இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் இந்த குடியிருப்பு வீடுகளை சுற்றியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிரந்தரமாக அங்கு தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்