கன்னியாகுமரி கடலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

Police security drill in Kanyakumari sea

Update: 2022-11-15 17:13 GMT

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் போலீசார் அதிநவீன படகில் ரோந்து வந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு ஒத்திகை

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் சார்பில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் 'சீ விஜில்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த ஒத்திகை இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன படகுகள் மூலம் ரோந்து வந்தனர். இதில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு துரைசிங் மற்றும் போலீசார் ஒரு படகில் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோதனை சாவடிகள்

இன்னொரு ரோந்து படகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.

மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதி நவீன ரோந்து ஜீப் மூலம் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்து வருகிறார்கள். கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உள்ளூர் போலீசாரும் இணைந்து சோதனை நடத்துகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்