விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
Near Vlathikulam Schoolgirl killed by electrocution
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே, வீட்டில் வெந்நீர் வைப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஒயரை சுவிட்ச் போர்டில் பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பள்ளி மாணவி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். தொழிலாளி. இவருடைய மகள் ஆயிஷா ஷிபாயா (வயது 13). இவர் அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலையில் தனது வீட்டில் குளிக்க வெந்நீர் வைப்பதற்காக வாட்டர் ஹீட்டரின் ஒயரை சுவிட்ச் போர்டில் பொருத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஆயிஷா ஷிபாயா தூக்கி வீசப்பட்டார்.
சாவு
அப்போது அருகில் உள்ள கதவில் சிறுமியின் பின்பக்க தலை மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். மாணவியின் உடலை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உயிரிழந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.