கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-10-26 18:16 GMT

கள்ளத்தொடர்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி (24) என்பவருக்கும் திருமணமானது. நந்தினி திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரியவந்ததால் நந்தினிக்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்பும் நந்தினி, அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவர் பாண்டித்துரை, நந்தினியை கண்டித்தார்.

தனது கள்ளத்தொடர்பு விவகாரத்திற்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வீட்டில் வைத்து நந்தினி அரிவாளின் மற்றொரு பகுதியால் பாண்டித்துரையின் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் பாண்டித்துரையின் உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசி மறைத்தார்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் கொலை செய்து விட்டு தனது கணவரை காணவில்லை என நந்தினி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், நந்தினி தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. மேலும் கிணற்றில் இருந்து பாண்டித்துரையின் உடலை மீட்டு கொலை வழக்காக பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் கணவரை கொலை செய்த நந்தினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும், தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி நந்தினி ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

பாராட்டு

இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு பாக்கியலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்