மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கப் பெற்றோர் முன் வர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் தொடர்பாக நாளை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2023-07-18 20:45 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டுக் குழந்தைகளின்பால் அக்கறை கொண்ட ஒரு பொறுப்புள்ள தந்தை நிலையிலுள்ள மனிதனாக இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை"

என்கிறார் திருவள்ளுவர். "எல்லா நலமும் ஈந்திடும் கல்வி" என்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, அம்மாநில மக்கள் பெற்றுள்ள கல்வியறிவு பெரும்பங்கு வகிக்கிறது. இதனை நன்குணர்ந்தே ஓர் அறிவாற்றல் மிக்க எதிர்காலச் சமுதாயத்தைக் கட்டமைத்திடும் பெரும்பொறுப்புடன் நம் மாநிலத்தின் மாணவ மாணவியருக்கு மிகச்சிறந்த கல்வியளிப்பதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி நமது அரசு அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறது.

கொரோனா பெருந்தொற்று போன்ற பேரிடர் காலத்திலும் கூட, நம் குழந்தைகள் கல்வி பயில்வதில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தடையற்ற கல்வி வழங்கும் நோக்கில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மேலும், மிகச்சிறந்த ஆற்றல்மிகு இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் நம் அரசு "நான் முதல்வன்" திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

நம் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருவதையும், சமூகநீதியைக் காப்பதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் வல்லமை கல்விக்கு உண்டு என்பதும் தாங்கள் அறியாததல்ல.

அப்படியிருக்கையில், நம் குழந்தைகளில் சிலர் பத்தாம் வகுப்பிற்குப் பின் கல்வியைத் தொடராமல் இருப்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். நம் குழந்தைகளின் உயர்கல்வி என்பது அவர்கள் பெற்றுள்ள உரிமைகளில் ஒன்று. அவர்கள் விரும்பிய உயர்கல்வியை அளிப்பது நம் கடமைகளில் ஒன்று. அதற்கு தாங்களோ அல்லது தங்கள் குழந்தைகளின் உளவியல் காரணமோ அல்லது சமூகச் சூழலோ தடை ஏற்படுத்தினால் அத்தடையைத் தகர்த்தெறிவோம்.

ஆகவே, எனதன்பு பெற்றோர்களே, உங்கள் மகனோ அல்லது மகளோ பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு முடிக்காமல் பள்ளியிலிருந்து இடை நின்றிருந்தாலோ அல்லது அவ்வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற பின்பு உயர்கல்வியைத் தொடராமல் விட்டிருந்தாலோ அல்லது அவ்வகுப்புகளில் தோல்வியுற்றிருந்தாலோ அதற்காக நம் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு நாம்தான் நல்வழி காட்ட வேண்டும்.

இவ்வாறான குழந்தைகளின் நலன் கருதி அவர்களின் கல்வித்தடையைக் களைய தமிழ்நாடு அரசு ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் 19-ஆம் நாளன்று மாலை 4 மணிக்கு (19.07.2023) அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் நடத்த ஏற்பாடு நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், உயர்கல்வி குறித்து உங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு வழிகாட்டு குழுவும் பள்ளிகளில் உங்களுக்காகக் காத்திருக்கும்.

ஜுலை மாதம் 30-ஆம் நாள் வரை உரிய கல்வி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறும். உங்கள் பிள்ளைகள் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அந்தத் துறையில் போதுமான கல்வியறிவை/தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே இப்போட்டிமிகு உலகில் தமக்கென ஓர் இடம்பிடித்து சிறப்பாக வாழ இயலும். அதற்கு உயர்கல்வி அவசியம் என்பதை தாங்கள் மறந்துவிடக்கூடாது.

தங்கள் குழந்தைகள் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் கூட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ITI) சேர்ந்து படிக்கலாம். 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (Polytechnic) கல்வியைத் தொடரலாம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், தங்கள் பிள்ளைகள் படித்த அல்லது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பள்ளிக்கு உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் செல்ல வேண்டும். மேற்கண்ட கூட்டத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு உகந்த, அவர்கள் விரும்பிய உயர்கல்வியை அளித்துஅறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைப்போம் வாருங்கள் பெற்றோர்களே.. நமது திராவிட மாடல் அரசு உங்களுடன் கைகோத்துக் கடமையாற்ற எப்போதும் தயாராக உள்ளது. நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்