ஜேம்ஸ்பாண்டாக மாறப்போகும் மகேஷ்பாபு
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், மகேஷ்பாபு. இவரது நடிப்பில் கடந்த மே மாதம், ‘சர்காரி வாரி பாட்டா’ என்ற படம் வெளியானது.;
ரூ.60 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபீசில் சுமார் ரூ.250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் திரிவிக்ரமுடன் இணைந்திருக்கிறார், மகேஷ்பாபு. இவர்கள் இருவரும் இணைந்து 2005-ம் ஆண்டு 'அதடு', 2010-ம் ஆண்டு 'கலீஜா' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்தனர்.
மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தற்போது 'மகேஷ்பாபு 28' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தெலுங்கு மொழியில் மட்டுமே தன்னுடைய படத்தை வெளியிட்டு வந்த மகேஷ்பாபு, இந்தப் படத்தில் இருந்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார். அதன்படி, திரிவிக்ரம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம், தெலுங்கு மொழி தவிர, தமிழ் மற்றும் மலையாளத் திலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் அடர்ந்த தலைமுடி, லேசான தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் மகேஷ்பாபுவின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
திரிவிக்ரம் படத்தைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். இதனை ராஜமவுலி, மகேஷ்பாபு இருவருமே உறுதி செய்து விட்டனர். ராஜமவுலி இயக்கப்போகும் படம் ரூ.500 கோடியில் உருவாக இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தப் படத்தின் மூலமாக தன்னுடைய மார்க்கெட் உலகளாகவிய அளவில் பரந்துவிரியும் என்று மகேஷ்பாபு நம்புகிறார். ஏனெனில் ராஜமவுலியுடனான அவரது படம், பான்-இந்தியா மூவியாக மட்டுமல்லாது, உள்நாடு, வெளிநாடு அளவில் திரையிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில் நடந்த டொராண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்ட ராஜமவுலி, அங்கு பேசும்போது தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "நான் அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். இந்தப் படம் ஹாலிவுட்டில் உருவான 'ஜேம்ஸ்பாண்ட்' மற்றும் 'இன்டியோனா ஜேம்ஸ்' கதாபாத்திரங்களைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டது. இது இந்திய அளவிலான ஆக்ஷன் அட்வெஞ்சர் படமாக இருக்கும். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு அடர்ந்த காடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
ராஜமவுலியின் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மகேஷ்பாபுக்கு 47 வயது பிறந்தது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் மகேஷ்பாபு படம் வெளியாகும் போது, அவருக்கு 50 வயது பிறந்திருக்கும் என்பதை மகேஷ்பாபுவே ஒரு பேட்டியில் கூறினார்.
அதன்படி பார்க்கையில் 2023-ம் ஆண்டு தொடங்கும் இந்தப் படம், 2025-ம் ஆண்டுதான் வெளியாகும் என்பது தெரியவருகிறது.