'மிஸ் இந்தியா' சினி ஷெட்டி அழகியின் மறுபக்கம்

‘மிஸ் இந்தியா’ அழகி சினி ஷெட்டி நான்கு வயது முதலே பரத நாட்டியம் பயில தொடங்கி இருக்கிறார். தனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு படிப்பையும் ஒரே சமயத்தில் தொடர்வது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருவதாக கூறுகிறார்.

Update: 2022-07-17 10:30 GMT

சினி ஷெட்டி

இந்த ஆண்டுக்கான 'மிஸ் இந்தியா' அழகி மகுடத்தை கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி சூடியிருக்கிறார். மும்பையில் சமீபத்தில் நடந்த இறுதி போட்டியில் 31 மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 21 வயதாகும் சினி ஷெட்டி அழகியாக தேர்வு செய்யப்பட, ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுகான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

நடனக் கலைஞர், நடிகை, மாடலிங், தயாரிப்பு நிர்வாகி போன்ற பன்முகம் கொண்டவர், சினி ஷெட்டி. இவரின் பூர்வீகம் மும்பை. அங்கு பிறந்தது வளர்ந்தவர் தற்போது கர்நாடகாவில் வசிக்கிறார். இவரது பெற்றோர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். மும்பையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.

சிறு வயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர் அதன் மூலம் கலை, கலாசாரம், பாரம்பரியம் சார்ந்த விஷயங்களை கற்று தேர்ந்திருக்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். யோகா மீதும் கவனம் பதித்து உடல், மன நலனிலும் அக்கறை செலுத்தி இருக்கிறார். இத்தகைய கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையே மிஸ் இந்தியா அழகி பட்டம் வெல்வதற்கு காரணமாக அமைந்திருப்பதாக கூறுகிறார்.

சினி ஷெட்டி நான்கு வயது முதலே பரத நாட்டியம் பயில தொடங்கி இருக்கிறார். 14 வயதில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். அவரது சமூக வலைத்தள பக்கங்கள் நடன வீடியோக்களால் நிரம்பியுள்ளன. ''நடனம் மூலம் கிடைக்கும் இன்பம் அலாதியானது. மனம், உடல், ஆன்மாவை சீரமைக்கும் தன்மை நடனத்துக்கு உண்டு'' என்கிறார்.

சினி ஷெட்டி படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் இளங்கலைப் படிப்பை முடித்திருப்பவர் தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (சி.எப்.ஏ) படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்துவதோடு படிப்பையும் ஒரே சமயத்தில் தொடர்வது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருவதாக கூறுகிறார்.

''எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாதீர்கள். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு முதலில் உங்களை நம்புங்கள்'' என்று பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு சினி ஷெட்டி சில மாதங்கள் மார்க்கெட்டிங் துறையில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். அதன் பிறகு பேஷன் துறைக்குள் நுழைந்தவர் மாடலிங் அவதாரம் எடுத்திருக்கிறார். அழகி போட்டியில் பங்கேற்பதற்கு 2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் மகுடம் சூட்டிய பிரியங்கா சோப்ராதான் தனது ரோல் மாடல் என்கிறார். தனது பாட்டியும் பக்கபலமாக இருப்பதாக குறிப்பிடுகிறார். பாட்டியின் வழிகாட்டுதல்தான் இன்று இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்றும் சொல்கிறார்.

பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் கோலோச்ச தொடங்கி விட்டாலும் கூட பழமைவாத சிந்தனைகள் முழுமையாக நீங்கவில்லை என்றும் வேதனையோடு சொல்கிறார். பல்வேறு கட்ட போராட்டங்களை தாண்டி மிஸ் இந்தியா பட்டம் பெற்றது மன மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடு கிறார்.

மிஸ் இந்தியாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ''வசீகரம், சகிப்பு தன்மை, அழகு போன்றவற்றால் அரங்கத்தில் இருந்தவர்களின் இதயங்களை சினி ஷெட்டி கவர்ந்து விட்டார். இனி உலக அழகி போட்டியில் பங்கேற்று நாட்டை பெருமைப்படுத்துவார் என்று நம்புகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்