குரங்கு காய்ச்சல்: அறிகுறிகளும்.. பரவும் முறைகளும்..!
கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் பற்றிய விரிவான விவரங்களை காண்போம்.
குரங்கு காய்ச்சல் என்றால் என்ன?
'மங்கி பாக்ஸ்' எனப்படும் இது ஒரு வகை வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மனிதர்களுக்கு இடையேயும் பரவலாம்.
பொதுவாக எங்கு காணப்படுகிறது?
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகள் மற்றும் அங்கு வாழும் விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. அந்த பகுதியில் இருந்து பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள்?
காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடலில் ஸ்டெமினா (ஆற்றல்) குறைவது, நிண நீர் சுரப்பிகளில் வீக்கம், சருமத்தில் வெடிப்பு, காயம், கொப்புளம் ஏற்படுவது குரங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். பின்பு புண்கள், கொப்புளங்கள் உருவாகும். அவை மஞ்சள் நிற திரவத்தால் சூழப்பட்டதாகவோ இருக்கலாம்.
அந்த சமயத்தில் உடலில் புள்ளி, புள்ளியாக கொப்புளங்கள் நெருக்கமாக உருவாகிக்கொண்டிருக்கும். முகம், உள்ளங்கை, கால்களில் சொறி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் நான்கு வாரங்கள் கூட நீடிக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது அவசியமானது.
குரங்கு காய்ச்சல் இறப்பை ஏற்படுத்துமா?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்து விடும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் கொண்டவர்கள் முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும்.
குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகள், நிமோனியா, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். குரங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், கண்காணிப்பும் குறைவாக இருப்பதும் இறப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
குரங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?
குரங்கு காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள், காய்ச்சல் பாதிப்பு ஆளானவர்கள் (இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் உடலில் ஏற்படும் புண்களில் இருந்து வழியும் சீழ், ரத்தம் போன்றவை மூலம் நோய்த்தொற்று பரவக்கூடும். அவர்கள் பயன்படுத்தும் உடைகள், படுக்கை அறை, துண்டுகள், உண்ணும் பாத்திரங்கள், உணவுகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் பரவக்கூடும்.
நோய் பாதிப்புக்குள்ளான நபரின் வாயில் இருக்கும் புண்கள் கூட தொற்று நோயை பரப்பலாம். அதாவது குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. அதனால் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுடன் நெருங்கி பழகுபவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் நஞ்சுக்கொடி மூலம் கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக்கூடும். குழந்தையை பெற்றெடுத்த பிறகு சரும தொடர்பு மூலமும் பரவும்.
இந்த நோய் ஏன் குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது?
1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த நோய் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது 1970-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.