30 வயதுக்கு பிறகு பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை மெருகேற்றி அதனை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளாக மாற்றுங்கள்.

Update: 2023-01-24 14:49 GMT

30 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும். வாழ்க்கையை வசந்தமாக்க உதவும்.

உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது. ஏனெனில் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் அனுபவிக்க முடியாது. செல்வத்தை தேடவும் முடியாது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பெற்றோர் மற்றும் உங்கள் வாழ்க்கை துணை ஆகியோரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம். அவர்களிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு மற்றவர்களிடம் பேசுவதை கூடுமானவரை தவிருங்கள்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பெறும் வெற்றி உங்களை பாதிக்கக்கூடாது. அவர்களை போல் நம்மால் வாழ முடியவில்லையே என்று ஏக்கம் கொள்ளாதீர்கள். உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்.

வருமானத்திற்கான ஆதாரமாக ஒன்றை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை மெருகேற்றி அதனை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு களாக மாற்றுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். தவறுகளை திருத்துவதற்கு தயங்காதீர்கள்.

நிராகரிப்புக்கு அஞ்சாதீர்கள். மற்றவர்கள் நம்மை அவமதிப்பதாக ஒருபோதும் கருதாதீர்கள். அது நிச்சயமாக உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும். உங்களுக்கான வாய்ப்புகளை யாராலும் தட்டிப்பறித்துவிட முடியாது. உங்கள் திறமையை நிரூபிப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக கருதி செயல்படுங்கள். அது நல்ல முடிவையே கொடுக்கும்.

உங்கள் கருத்து நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நபர்களுடன் விவாதம் செய்து உங்கள் நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.

எல்லாரிடமும் ஆலோசனை பெறுவதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.

'இப்போது நமக்கு நேரம் சரி இல்லை. நல்ல வாய்ப்புகள் நம்மை தேடி வரட்டும்' என்று சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதை நிறுத்துங்கள். 'நல்ல வாய்ப்பு' என்று எதுவும் இல்லை. நாம் தான் கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். அதுதான் நட்பை பலப்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்