18 வயதுக்கு பிறகும் உயரமாக வளர வேண்டுமா?

உயரமான உடல் தோற்றத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் உயரத்துக்கும், மரபணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் குறிப்பிட்ட வயதுடன் வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது.

Update: 2022-10-09 13:54 GMT

பொதுவாக 18 வயதை நெருங்கும்போதோ அல்லது பருவமடையும் காலகட்டத்துடனோ வளர்ச்சி நின்று போய்விடும் என்பது மருத்துவ ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக உயரத்தில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சீரான உணவைப் பின்பற்றுங்கள்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவு பழக்கத்தை பின்பற்றுவது உயரமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்கும். பழங்கள், பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்களை அன்றாட உணவில் சேர்ப்பது உயரத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளை பலப்படுத்தக்கூடியது. அதன் மூலம் வளர்ச்சியும் மேம்படும்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்:

அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக உடற்பயிற்சி இடம் பெற்றிருக்க வேண்டும். குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் உற்சாகமாகவும், புத்துணர்வுடனும் செயல்பட தூண்டும். உடற்பயிற்சியை பொறுத்தவரை பயிற்சியாளரின் மேற்பார்வையில் மேற்கொள்வது நல்லது. அவ்வாறு உடற்பயிற்சி செயல்முறையை தவறாமல் பின்பற்றுவது எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்தும். உயரமாக வளர்வதற்கும் வழிவகை செய்யும்.

சரியான தோரணையில் அமருங்கள்:

உட்கார்ந்திருந்தாலோ, நடந்தாலோ, பயணத்தில் இருந்தாலோ இடுப்பு மற்றும் கழுத்து நேர்நிலையில் இருக்க வேண்டும். அவை வளைந்த நிலையில் இருந்தால், உயரத்தில் 3 முதல் 4 அங்குலம் வரை தடைபடும். மேலும் உடல் தோரணை சரியாக இல்லாவிட்டால் நிறைய பாதிப்பையும் ஏற்படுத்தும். முதற்கட்டமாக முதுகு வலி, கழுத்துவலி ஏற்படும். கணினி முன்பு நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையே தலையணையை வைக்கலாம். இடுப்பு மற்றும் கழுத்தை எப்போதும் நேராக வைத்திருப்பதும் அவசியமானது.

தூக்கத்தில் ஆழ்ந்திருங்கள்:

பிட்யூட்டரி சுரப்பியில் வளர்ச்சிக்கு காரணமான எச்.ஜி.எச் எனப்படும் வளர்ச்சி ஹார்மோன் உள்ளடங்கி இருக்கிறது. இது இளமை பருவத்தில் தூக்கத்தின் போது வெளியிடப்படும். அதனால் இளமை பருவத்தில் போதுமான தூக்கம் அவசியம். இரவில் சீக்கிரமாக தூங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். படுக்கை அறைக்குள் செல்போனை பயன்படுத்தாதீர்கள். பகலில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

மருந்துகள் சாப்பிடுங்கள்:

எலும்புகள் மற்றும் உடல் அமைப்பின் மேம்பாட்டுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, டாக்டரின் பரிந்துரையின்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சார்ந்த பொருட்கள், மருந்துகள் சாப்பிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்