மாங்காயும் சாப்பிடுங்கள்...

இது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் சாப்பிடுவதற்கு பலரும் விரும்புகிறார்கள். பழுத்த மாம்பழங்களை போலவே பச்சை மாங்காய்களையும் சாப்பிடலாம். அவையும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன.

Update: 2022-06-03 13:59 GMT

கர்ப்பிணி பெண்கள் மட்டுமின்றி மற்றவர்களும் மாங்காய் சாப்பிடுவதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். மாங்காய்களை துண்டுகளாக வெட்டி அப்படியேதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. மாங்காய்களை கொண்டு சட்னி, துவையல், சாலட், ஜூஸ் உள்பட பல்வேறு பதார்த்தங்களை தயாரித்து சாப்பிடலாம். மாங்காயுடன் உப்பு, மிளகுதூள் தூவி சாப்பிடுவதும் ருசியாக இருக்கும். மாங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.

1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

மாங்காயில் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அதனை சாப்பிடுவதால், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். மாங்காயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடென்டுகளும் உள்ளன. மாங்காய் சாப்பிடுவது, உடல் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு போதுமான அளவுக்கு அளிக்கும்.

2. கோடை வெப்பத்தை விரட்டும்

பழுத்த மாம்பழங்கள் சூடான தன்மையை கொண்டிருக்கும். ஆனால் பச்சை மாங்காய்கள் குளிர்ச்சியான குணங்களை கொண்டவை. எனவே, மாங்காய் உட்கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க முடியும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் முடியும். அதனால் தான் வட இந்தியாவில் கோடை காலங்களில் 'ஆம் பன்னா' எனப்படும் பானம் பருகப்படுகிறது. மாங்காய் துண்டுகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் கோடையில் வெப்பத்தை வெல்ல சிறந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் பச்சை மாங்காய் உடலில் இருந்து இரும்பு மற்றும் உப்பு இழக்கப்படுவதை தடுக்கக்கூடியது. அதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் சூரிய ஒளி அல்லது வெப்ப தாக்கத்தின் மூலம் ஏற்படும் வீரியமும் குறையும். அடிக்கடி வெளியே செல்பவராக இருந்தால் தினமும் ஒரு டம்ளர் 'ஆம் பன்னா' பானத்தை பருகுவது நல்லது.

3. செரிமான அமைப்பை மேம் படுத்தும்

கோடையில் வயிற்றுக்கோளாறு ஏற்படக்கூடும். உணவு விஷமாக மாறி பாதிப்பையும் ஏற்படுத்தும். கோடை கால வெப்பம் மற்றும் உணவு முறை களால் பலர் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். குடலை வலுப்படுத்த விரும்பினால், ஆம் பன்னா உள்ளிட்ட குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது நல்லது.

பச்சை மாங்காயை எந்த வடிவிலும் உட்கொள்ளலாம். அது செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கச் செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அசிடிட்டி பிரச்சினை இருந்தால் மாங்காய் சாப்பிட்டாலே விரைவில் சரியாகிவிடும்.

4. அதிக வியர்வையை கட்டுப்படுத்தும்

கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வெளிப்படும். அதிக வியர்வை கொண்டவர்கள் பச்சை மாங்காயை தாராளமாக உட்கொள்ளலாம். ஏனெனில் அது சரும துளைகளில் இருந்து நீர் வெளியேறுவதை கட்டுப் படுத்தக்கூடியது.

5. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதே பெரும்பாலான உடல்நல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்திருக்கிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறையக்கூடும். அதனால்தான், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், வைட்டமின் சி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியிருக்கும். பச்சை மாங்காயில் இவை அனைத்தும் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

6. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது

உடலை நோயின்றி வைத்திருக்க நச்சுக்களை நீக்குவது மிகவும் அவசியமானது. பச்சை மாங்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. அதனை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் செய்யும். கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் துணை புரியும்.

7. உடல் எடையை நிர்வகிக்கும்

வெப்பமான கோடை மாதங்களில் உடல் எடையை குறைக்க விரும்பினால், பச்சை மாங்காய் சிறந்த நண்பனாக விளங்கும். பழுத்த மாம்பழங்களை விட இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். கலோரிகளை அதிகரிக்காமல் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். குறைந்த கொழுப்பு, அதிக நார்ச்சத்து ஆகியவை பச்சை மாங்காயை சிறந்த கோடை கால உணவாக மாற்றுகின்றன. எனவே தினமும் ஒரு பச்சை மாங்காய் சாப்பிடுவதற்கு மறக்காதீர்கள்.

பச்சை மாங்காயை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதிகம் சாப்பிட்டால் வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தசைப்பிடிப்பு, அரிப்பு, தொண்டை புண் போன்றவையும் ஏற்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்