மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள்.

Update: 2022-07-17 11:47 GMT

மேலும் மழைக்காலத்தில் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். அதனால் பக்கோடோ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் விஷயத்தில் அறிவியல் ரீதியான உண்மைகளை ஆராயாமல் அதனை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள்.

கட்டுக்கதை 1: மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது சளியை உண்டாக்கும்.

உண்மை: தயிரை அதிக குளிர்ச்சிக்கு ஆளாக்காமல் அறையின் வெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அப்படி அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தயிரை உணவில் கலந்து சாப்பிடுவது சரியானது. அதிலிருக்கும் புரோபயாடிக் பண்புகள், இரைப்பை குடல் நோய்களை தடுக்க உதவும்.

கட்டுக்கதை 2: மழைக்காலத்தில் தயிர் உட்கொண்டால் செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும்.

உண்மை: பாலை விட தயிரில் இருக்கும் புரதம் எளிதில் செரிமானம் ஆவதற்கு துணை புரியும். மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் செரிமான செயல்முறையை எளிதாக்கும்.

கட்டுக்கதை 3: இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

உண்மை: இரவிலோ அல்லது தூங்கச் செல்லும் முன்பாகவோ தயிர் சாப்பிடும்போது அதிலிருக்கும் டிரிப்டோபான் எனப்படும் சேர்மம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

கட்டுக்கதை 4: பாலூட்டும் தாய்மார்கள் தயிரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் சளியை ஏற்படுத்தும்.

உண்மை: தயிரில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்தும். மேலும் தயிரில் உள்ள புரோபயாடிக் பண்புகள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை தடுக்க உதவும். தாய்க்கோ அல்லது குழந்தைகோ, சளி, இருமலை ஏற்படுத்தாது.

கட்டுக்கதை 5: கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தயிரை தவிர்க்க வேண்டும்.

உண்மை: கர்ப்பிணி தாய்மார்கள் அடிக்கடி செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். சிறுகுடலில் நடைபெறும் செரிமானத்திற்கு அதன் முக்கிய பாக்டீரியாக் கூறுகளான லாக்டோபாகிலஸ், அமிலோபிலஸ் காரணமாக இருப்பதால் தயிர் சாப்பிடுவது நல்லது. குறைந்தபட்சம் மதிய உணவின்போதாவது தயிர் உட்கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை 6: தயிர் சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

உண்மை: கொழுப்பின் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டோன்ட் மற்றும் ஸ்கிம்டு மில்க் தயிர் கடைகளில் விற்கப்படுகிறது. கொழுப்பைத் தவிர, கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் ஆகியவையும் தயிரில் நிரம்பியுள்ளது. மேலும் உடலில் கால்சியம் உறிஞ்சுதலுக்கும் தயிர் உதவுகிறது.

கட்டுக்கதை 7: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கக் கூடாது.

உண்மை: தயிர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது. எனவே, குழந்தைகளை தயிர் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவது சிறப்பானது.

எனவே, வருடத்தின் எந்த பருவமாக இருந்தாலும் தயக்கமின்றி தினமும் தயிர் சாப்பிடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்