ஆந்திராவில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சி மோதல்: வாகனங்கள் எரிப்பு; அலுவலகங்கள் சூறையால் பதற்றம்
ஆந்திராவில் அரசு எதிர்ப்பு பேரணி மீது கல்வீசியதால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
அமராவதி,
ஆந்திராவில் அரசு எதிர்ப்பு பேரணி மீது கல்வீசியதால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
எதிர்க்கட்சி பேரணி
ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்சேர்லா நகரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலுஙங்கு தேசம் கட்சியினர் பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியில், மச்சேர்லா பகுதி தெலுங்கு தேசம் பொறுப்பாளர் ஜூலகண்டி பிரம்ம ரெட்டியின் ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர்.
போர்க்களமான நகரம்
இந்தப் பேரணியில் சென்றவர்கள் மீது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் கற்களை வீசித்தாக்கினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கற்களை வீசினர். தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலரும் காயம் அடைந்தனர்.
தெலுங்குதேசம் கட்சித் தலைவர்களின் வாகனங்களும், வீடுகளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
ஒருவரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது பதற்றத்தை மேலும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அந்த மச்சேர்லா நகரமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த மோதலைத் தொடர்ந்து பெருந்திரளாக கூட்டம் கூடியது. கூட்டத்தைப் போலீசார் பலத்தைப் பயன்படுத்தி கலைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு தகவல்
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் விரைந்து சென்று, கூட்டத்தைக் கலைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு பல்நாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒய்.ரவிசங்கர் ரெட்டி தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "இது முற்றிலும் கோஷ்டி சண்டை தான். இது அரசியல் மோதல் அல்ல. இந்தப் பகுதியில் கடந்த 20-30 வருடங்களாகவே இந்த கோஷ்டி மோதல்கள் நீடித்து வருகின்றன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது" என தெரிவித்தார்.
தடை உத்தரவு
தற்போது அங்கு மேலும் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்கிற விதத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரபாபு நாயுடு கண்டனம்
இந்த சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "மச்சேர்லா நகரில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குண்டர்கள் நடத்திய தாக்குலுக்குக்கும், எங்கள் கட்சித்தலைவர்களின் வீடுகளுக்கும், கட்சி அலுவலகங்களுக்கும் தீ வைத்த சம்பவங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஆளுங்கட்சியின் ரவுடித்தனத்தின் கொம்புகளை போலீசாரே ஊதுவது இன்னும் மோசமானது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் கலவரத்தில் ஈடுபட்டபோது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என கூறி உள்ளார்.
தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோதல் தொடர்பாக சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.