வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திய இளைஞர் - விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை

தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-01-28 12:25 GMT

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இதற்கிடையே கடந்த 20-ந் தேதி மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். தகவல் அறிந்த நூல்புழா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பள்ளி ஆசிரியரால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி ஆசிரியரை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நூல்புழா போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பள்ளி ஆசிரியரால் மாணவிக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் ஆலப்புழா மாவட்டம் கனிச்சுகுளங்கரை பகுதியை சேர்ந்த ஆதித்தன் (20) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகள் மூலம் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்தனர். 3 மாதம் நட்பாக பழகி வந்த நிலையில், ஆதித்தன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாணவியிடம் கூறி உள்ளார். இதற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள்.

அதன் பின்னர் ஆதித்தன் பள்ளி மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து மாணவி பள்ளி மற்றும் வீட்டில் யாருடனும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டாள். சம்பவத்தன்று மாணவி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆதித்தனை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்