சொத்து பிரச்சினையில் வாலிபர் படுகொலை; சகோதரர் கைது
பெங்களூருவில் சொத்து பிரச்சினையில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு:பெங்களூருவில் சொத்து பிரச்சினையில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு கூடம் நடத்திய வாலிபர்
பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காவேரிபுரா, 3-வது மெயின் ரோடு, 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அரசய்யா. இவரது மனைவி ஜெயம்மா. இந்த தம்பதிக்கு சதீஸ்குமார் (வயது 37) மற்றும் வினய்குமார் (31) என்ற மகன்கள் உள்ளனர். இவர்களில் சதீஸ்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பெங்களூரு தாவரகெரேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வினய்குமார் ஆய்வு கூடம் வைத்து நடத்தி வந்தார்.
சதீஸ்குமார் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். காவேரிபுராவில் உள்ள வீட்டில் சகோதரர்கள் தங்களது பெற்றோருடன் தங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் 4-வது மாடியில் வினய்குமார் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்து தாய் ஜெயம்மா அதிர்ச்சி அடைந்தார்.
சகோதரர் கைது
உடனே தனது மகனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினய்குமார் இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காமாட்சி பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று வினய்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வினய்குமாரை, அவரது சகோதரர் சதீஸ்குமார் தான் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. சதீஸ்குமாருக்கு ஏராளமான கடன் இருந்தது. அந்த கடனை அடைக்க வீட்டை விற்க வேண்டும் என்று சதீஸ்குமார் கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக சதீஸ்குமார், வினய்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் காவேரிபுராவில் உள்ள வீடு தொடர்பாக சகோதரர்கள் இடையே சொத்து பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்து பிரச்சினையில் கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகன் வினய்குமாரை, மூத்த மகன் சதீஸ்குமார் தான் சொத்து பிரச்சினையில் கொலை செய்திருப்பதாக கூறி காமாட்சி பாளையா போலீசில் ஜெயம்மாவும் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.