'கன்னி' வாக்குகளை பதிவு செய்த இளம்பெண்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தங்களது கன்னி வாக்குகளை இளம்பெண்களும், மாணவிகளும் பதிவு செய்தார்கள். ஜனநாயக கடமையாற்றியது பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர்.

Update: 2023-05-10 20:38 GMT

பெங்களூரு, மே.11-

முதல் முறையாக கன்னி வாக்குகளை...

கர்நாடக சட்டசபைக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போடுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக முதல் முறையாக தங்களது கன்னி வாக்குகளை அளித்த இளம்பெண்கள், மாணவிகள், மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததை பார்க்க முடிந்தது.

அதன்படி, சாமுண்டி நகரில் வசித்து வரும் காயத்திரி வினாயக் முதல் முறையாக ஓட்டளித்து விட்டு கூறும் போது, முதல் முறையாக வாக்களிக்க செல்லும் போது பயமாக இருந்தது. வாக்குச்சாவடி மையங்களில் இருந்த ஊழியர்கள் உதவி செய்தார்கள். அதன்பிறகு எனது ஜனநாயக கடமையாற்றி விட்டு வந்து விட்டேன். 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

பெருமையாக உள்ளது

பெங்களூரு நேரு சர்க்கிளில் வசிக்கும் என்ஜினீயரிங் மாணவி அம்ஷிகாவும், அவரது சகோதரி பி.ஏ. படிக்கும் ஹர்ஷதாவும் கூறுகையில், ஓட்டுரிமை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட பார்க்கிறோம். அதனால் முதல் முறையாக வாக்களித்ததில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம் என்பதில் பெருமையாக உள்ளது, என்றார்கள்.

இதுகுறித்து சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த சினேகா கூறுகையில், முதல் முறையாக ஓட்டுப்போட செல்லும் போது பயம் இருந்தது. ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்ததும் உற்சாகமாகி விட்டேன். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை ஆகும். எனவே எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும், இளம்பெண்களில் இருந்து அனைத்து தரப்பினரும் தங்களது கடமையாற்றுவதில் இருந்து தவறக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

உரிமையை விட்டு கொடுக்க...

இதுபோல், சேஷாத்திரிபுரத்தை சந்தியா கூறும் போது, முதல் முறையாக ஓட்டுப்போட்டுள்ளேன். பயம் எதுவும் இல்லை. ஜனநாயகத்தில் ஓட்டு என்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். அந்த உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது. நமக்காக பணியாற்ற நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகும், என்றார். பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள இளம்பெண்கள், வாலிபர்கள் தங்களது கன்னி வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்