காங்கிரஸ் அரசை கண்டித்து விதானசவுதாவில் தொடர் தர்ணா; எடியூரப்பா அறிவிப்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் காங்கிரஸ் அரசை கண்டித்து விதானசவுதாவில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2023-06-25 21:57 GMT

பெங்களூரு:

வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் காங்கிரஸ் அரசை கண்டித்து விதானசவுதாவில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் நடைபெற்ற பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

சட்டசபைக்குள் போராட்டம்

காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை மோசம் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அதன்படி வருகிற 4-ந் தேதி சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சட்டசபைக்கு வெளியே விதானசவுதா வளாகத்தில் நான் தொடர் தர்ணாவில் ஈடுபடுவேன். காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒவ்வொரு நிலையிலும் போராட்டத்தை தொடர வேண்டும். இந்த போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும். நம்மிடம் எம்.எல்.ஏ.க்கள் பலம் குறைவாக இல்லை. 66 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. நான் ஒருவன் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

தூக்கி எறிய வேண்டும்

காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போனதால், பா.ஜனதாவால் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாமல் போனது. காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் பற்றி பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எவ்வளவு சாத்தியமோ, அந்த வேகத்தில் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். நாம் மனது வைத்தால் சட்டசபையை நடத்த முடியும். நாம் அரசு அமைக்கும் வரை மாநிலத்தில் பா.ஜனதா கட்சியை வளர்க்கலாம். அதற்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக இடங்களில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும்.

பிரதமர் மோடிக்கு பரிசு

நாட்டில் தற்போது 14 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. மாநிலத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு பரிசளிக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவேன்.

நாடாளுமன்ற தேர்தலை போன்று, பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்