பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் மல்யுத்த வீரர்கள் எச்சரிக்கை

சாக்‌ஷி மாலிக், மல்யுத்த வீரர்கள் மிரட்டப்படுவதாகவும், அதனால்தான் அந்த சிறுமியின் தந்தை பல்டி அடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Update: 2023-06-11 03:15 GMT

சோனிபட், 

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக 15-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய மந்திரி உறுதி அளித்ததால், மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பிரிஜ்பூஷன் மீது புகார் அளித்த 18 வயதுக்குபட்ட வீராங்கனையின் தந்தை, தாங்கள் கொடுத்தது பொய் புகார் என பல்டி அடித்து உள்ளார். இந்த நிலையில் அரியானாவின் சோனிபட்டில் நேற்று நடந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர்கள் மிரட்டப்படுவதாகவும், அதனால்தான் அந்த சிறுமியின் தந்தை பல்டி அடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'பாதிக்கப்பட்டவர்களை பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. பிரிவு 161 மற்றும் 164-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் மாற்றப்பட்டு உள்ளன. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை' என குற்றம் சாட்டினார். லஞ்சத்தை பெற்றுக்கொண்டு போராட்டத்தை முடிக்குமாறு பஜ்ரங் பூனியாவுக்கு அழைப்புகள் வருவதாக குற்றம் சாட்டிய சாக்ஷி மாலிக், இதனால்தான் பிரிஜ்பூஷனை முதலில் கைது செய்துவிட்டு விசாரணையை நடத்துமாறு கோரி வருகிறோம் என்றும் கூறினார். அவர் வெளியே இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உடைந்துபோவார்கள் எனவும் தெரிவித்தார். எனவே வருகிற 15-ந்தேதிக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், தவறினால் போராட்டத்தை தொடரப்போவதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ஆசிய போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்