விபத்தில் தொழிலாளி சாவு:தனியார் பஸ் டிரைவருக்கு 6 மாதம் சிறை

விபத்தில் தொழிலாளி இறந்தார்.விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவருக்கு 6 மாதம் சிறை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-29 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் சுந்தர் சாலியன். கூலி தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி, பைக்கம்பாடி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, ஜோகட்டேயில் இருந்து மங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சுந்தர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான காட்டிபள்ளாவை சேர்ந்த உஸ்மான் (வயது 37) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி அஞ்சலி சர்மா தீர்ப்பு வழங்கினார். அப்போது விபத்தை ஏற்படுத்திய உஸ்மானுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்