தீவிரமடையும் காற்று மாசு... டெல்லியில் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல்...!
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் கட்டுமானப்பணிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் 415 ஆக இருந்த காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு 463 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி டெல்லி நகருக்குள் மின்சார லாரிகளை தவிர அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத இதர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வழங்காத இலகுரக வணிக வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பணிகள், மேம்பாலம் மற்றும் சாலைப்பணிகள், குடிநீர் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பொது திட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 - 9 வகுப்புகள், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடுவது, பதிவு எண்களின்படி ஒற்றைப்படை-இரட்டை அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அண்டை மாநிலங்களான அரியானா, உத்திரபிரதேசத்தில் அறுவடைக்காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, கட்டுமானங்களை இடிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சாலைகளில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுதல், தண்ணீர் லாரிகளை கொண்டு சாலைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.