3 ஆண்டுகளாக நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளாக 14 தெரு நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து பெண் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். மின்சார வசதி கூட சரிவர இல்லாத அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த அந்த பெண்மணி, பல தெரு நாய்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.
முதலில் முறையாக பராமரித்து வந்த அந்த பெண், ஒரு கட்டத்தில், நாய்களுக்கு சரியாக உணவு அளிக்காமலும் பராமரிக்காமலும் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய்கள் நோய்வாய்ப்பட்டும், அவற்றின் கழிவுகள் அகற்றப்படாமலும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இது குறித்து அப்பார்ட்மெண்ட் வாசிகள் கடந்த ஏப்ரல் மாதம் காவல் துறைக்கும் விலங்குகள் நல வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அங்கு சென்றபோது, முன்கூட்டிய தகவலை அறிந்து வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் காவல்துறைக்கு அந்த பெண் டிமிக்கி கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்து விட்ட நிலையில், அந்த நாய்களை விலங்குகள் நல வாரியத்தினரிடம் ஒப்படைக்கும்படி அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பல முறை அந்த பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் அந்த நாய்களை வெளியேற்றாமல் இருந்ததால் இறுதியில், அந்த பெண்ணுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6-ம் தேதி காவல்துறை உதவியுடன் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த வீட்டிற்குள் இருந்த நாய்களை பத்திரமாக மீட்டனர்.
பல நாட்களாக பட்டினியாக இருந்ததால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் உரிய ஆலோசனை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.